வீட்டு கடன் வாங்க வங்கியை தேர்வு செய்வது எப்படி?

Referred URL
http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=103934&cat=504

கடன் பெறும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விவரங்களை இப்போது காணலாம்.

  • அடுக்குமாடி வீடோ, தனி வீடோ வாங்குவதற்கு வங்கிகள் 80 முதல் 85 சதவீத கடனை மட்டுமே வழங்கும் எஞ்சிய தொகையை நாம்தான் மார்ஜின் மணியாக செலுத்த வேண்டும். வங்கி கடனுக்காக அணுகும்போது மார்ஜின் மணியை எப்படி புரட்டப்போகிறோம் என்பதை முன்கூட்டியே நாம் திட்டமிட வேண்டும். 

  • கையில் உள்ள பணத்தை செலவழித்து நிலத்தை வாங்கிவிட்டு வீடு கட்டுவதற்காக மட்டும் கடன் கேட்டு வங்கிக்கு செல்பவர்கள் அந்த நிலத்தையே மார்ஜின் மணியாக வைத்துக்கொள்ளுமாறு வங்கி அதிகாரியிடம் கேட்கலாம். அதற்கு சில வங்கிகள் தாராளமாக ஒப்புதல் அளிக்கும்.

  • எந்த வங்கியில் வட்டி விகிதம் குறைவு என எப்படி தெரிந்துகொள்வது? சில வங்கிகளில் 11 சதவீத வட்டி என்பார்கள், சில வங்கிகளில் 12 சதவீத வட்டி என்பார்கள். ஆனால், சில சமயங்களில் அதிக வட்டி விகிதம் சொல்லும் வங்கி சிறந்ததாக இருக்கும். எப்படி என்கிறீர்களா? சில வங்கிகள் வட்டி விகிதத்தை நாள் கணக்கில் கணக்கிடும். சில வங்கிகள் ஆண்டுக்கணக்கில் கணக்கிடும்.
  • இதை சாமானிய மக்கள் புரிந்துகொள்வது சிரமம்தான். ஆனால், ஒரு சுலபமான வழி உள்ளது. அதாவது ஒரு லட்சம் கடனுக்கு 20 ஆண்டுகளுக்கு எவ்வளவு மாதாந்திர தவணை (இ.எம்.ஐ.) செலுத்த வேண்டும் என்று கேளுங்கள். இந்த தொகையை எந்த வங்கி குறைவாக சொல்கிறதோ அந்த வங்கியைத் தேர்வு செய்யலாம்.

  • முக்கியமாக அரசு வங்கியைத் தேர்வு செய்வது நல்லது. தனியார் வங்கிகள் கடன் வழங்கும் நடவடிக்கைகளை விரைவாக நிறைவேற்றி கடனை வழங்குகின்றன. அதற்காக பலர் தனியார் வங்கிகளை நாடிச் செல்கின்றனர். அரசு வங்கிகள் நிதானமாக செயல்பட்டாலும் பொறுமையாக காத்திருந்து அரசு வங்கியில் கடன் பெறுவதே நல்லது. தனியார் வங்கிகள் அரசு அறிவிக்கும் வட்டி குறைப்பு ஆணையை உடனே நிறைவேற்றும். ஆனால், சில தனியார் வங்கிகள் அவ்வாறு நிறைவேற்றுவதில்லை.

  • அதேபோல கடனை முன்கூட்டியே செலுத்தி முடித்துவிட நினைக்கும்போது (ப்ரீ குளோசர்) தனியார் வங்கிகள் அதற்கு அபராத கட்டணமாக பெரும் தொகையை வசூலிக்கும். அரசு வங்கிகளில் சட்டப்படி ப்ரீ குளோசர் கட்டணம் என்னவோ அதை மட்டும் பெறுகின்றனர். சில சமயங்களில் அதற்கும் கூட சலுகை கிடைப்பதுண்டு.

  • எந்த தனியார் வங்கி விரைவாக கடனை வழங்குகிறதோ அந்த வங்கியைத்தான் பில்டர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால், நாம்தான் அரசு வங்கியில் கடன் வாங்குவதில் உறுதியாக இருக்க வேண்டும். கடன் வாங்க சிறிதுகாலம் அலைந்தாலும் கூட, திரும்பச் செலுத்தும்போது அரசுத்துறை வங்கிகள், நிறுவனங்கள் என்றால் கவலையின்றி இருக்கலாம். சில நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தனியார் வங்கி மூலம் கடனுக்கு ஏற்பாடு செய்து வீடுகளை கட்டிக்கொள்ள ஏற்பாடு செய்வது உண்டு. அதுபோன்ற சமயங்களில் அவர்கள் அந்த வங்கி அதிகாரிகளுடன் பேசி அதிக சலுகைகளை பெற வாய்ப்பு உள்ளது. அதுபோன்ற நேரத்தில் தனியார் வங்கிகளிலும் கடன் பெறுவதில் தவறு இல்லை.

  • சரி, வட்டி முறையை எப்படி தேர்வு செய்வது? நிரந்தர வட்டி முறையா (ஃபிக்ஸ்ட் இன்ட்ரஸ்ட்) மாறும் வட்டி முறையா (ஃபுளோட்டிங் இன்ட்ரஸ்ட்) என்றால் மாறும் வட்டி முறையே சிறந்தது எனலாம். நாம் வீடு கட்டும்போதோ, வாங்கும்போதோ நிரந்தர வட்டி குறைவானதாகக் கூட இருக்கலாம். அதற்காக நிரந்தர வட்டி முறையை தேர்வு செய்யக்கூடாது. ஏனென்றால், வட்டி சதவீதம் உயர்ந்துகொண்டே போனால் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்போது என்ன வட்டி உள்ளதோ அந்த வட்டி விகிதத்தை வங்கிகளே நிர்ணயித்துவிடும். மாறும் வட்டி விகிதத்தில் அரசு வட்டியை குறைக்கும் போதெல்லாம் வட்டி குறைக்கப்படும். ஏற்றும்போதெல்லாம் ஏற்றப்படும்.

  • கடன் வாங்கும்போது ப்ராசசிங் கட்டணம் என குறிப்பிட்ட சதவீதம் வசூலிக்கப்படும். இதை குறைக்குமாறு நாம் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கலாம். சில நேரங்களில் அதை குறைக்க வாய்ப்பு உள்ளது. கடனை கொடுக்கும் போது வங்கிகளில் நமது வீட்டின் ஒரிஜினல் பத்திரங்களை கொடுக்க வேண்டும். எனவே அந்த பத்திரங்களை நகல் எடுத்து ஒரு செட் வைத்துக்கொள்வது சிறந்தது. அப்போதுதான் வீட்டு வரி செலுத்த, குடிநீர் இணைப்பு வாங்க என பல்வேறு தேவைகளுக்கு அந்த நகல்களை பயன்படுத்த முடியும்.

You May Also Like

0 comments